இலங்கை முன்பு சிலோன் என்று அழைக்கப்படும் பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாகவும் அதே பெயரினால் அழைக்கப்பட்டது. பசுமையான மற்றும் வளம் மிக்க செழிப்பான நாடான, இலங்கை குடியரசு ஒரு தீவாகும். இது இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் தென்கிழக்கு புறமாக கீழே அமைந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில்தான் தேயிலை முதன்முதலில் இங்கு பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யத் தொடங்கியது. இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை விரைவில் உலகின் மிகச்சிறந்த தேயிலை என்ற நற்பெயரைப் பெற்றது. மேலும் தேயிலை ஏற்றுமதி காலனித்துவ பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக மாறியது. உலகெங்கிலும் உள்ள இல்லத்தரசிகள் மற்றும் உணவகங்கள் மத்தியில் இலங்கை பிரபல்யம் அடைந்ததுடன் அவர்கள் நாட்டின் பெயரை நன்கு அறிந்தனர். இலங்கையிலிருந்து வரும் தேயிலை டின் அல்லது பாக்கெட்டில் அதன் தோற்றத்தை வைத்தே தேயிலை தரம், நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம் அளிக்கிறது என்பதை அறிந்தனர். சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதி புதிய சந்தைகளைக் கொண்டு வந்தது. உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தது. 1965 ஆம் ஆண்டில் சிலோன், முதல் முறையாக, உலகின் மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக மாறியது.
1972 இல் நாட்டின் பெயர் இலங்கை என்று மாற்றப்பட்ட போது, அதன் முதன்மையான கைத்தொழில்துறையாக இருந்த தேயிலைத்துறை பாரிய சிக்கலை எதிர்கொண்டது. சிலோன் என்பது நாட்டின் முன்னாள் பெயர் மட்டுமல்ல; இது உலகின் முன்னணி வர்த்தக பெயர்களில் ஒன்றாகும், இது வர்ஜீனியா முதல் விளாடிவோஸ்டாக் வரையிலான நுகர்வோருக்கு நன்கு தெரிந்திருந்தது – 1930 களின் முற்பகுதியில் இருந்து தொழில்துறை தீவிரமாக ஊக்குவித்து முதலீடு செய்து வந்திருந்தது. அதனைக் கைவிடுவது ஒரு பின்னடைவைக் கொடுக்கும். அதில் இருந்து எளிதாக மீளமுடியாது. மேலும், அறிமுகமில்லாத புதிய வர்த்தக பெயரை – ‘ஸ்ரீலங்கா தேயிலை’-யை (‘Sri Lanka Tea’ ) விளம்பரப்படுத்துவதற்கும் நிறுவுவதற்கும் மேற்கொள்ளும் செலவு பாதகமானதாக அமைந்துவிடும்.
காலனித்துவ கடந்த காலத்திலிருந்து முழுமையாக விடுபட்டு நாட்டிற்கு ஒரு புதிய தொடக்கத்தை கோரிய ஒரு சிலர் எதிர்த்த போதிலும், கைத்தொழில்துறையின் தலைவர்கள் குடியரசை வலியுறுத்தி, நாட்டின் மிகவும் பிரபலமான தயாரிப்பைக் குறிக்க சிலோன் என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி பெற முனைந்தார்கள். இலங்கையில் இருந்து வரும் தேயிலை இன்னும் சிலோன் தேயிலையாக (Ceylon Tea) விற்பனை செய்யப்பட்டு வருகின்றது; இது ஒரு விலைமதிப்பற்ற உலக வர்த்தகக் குறியாக உள்ளது.
சட்டரீதியான வரைவிலக்கணம்
‘சிலோன் தேயிலை’ (Ceylon Tea) என்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படும் விசேட, சட்ட வேறுபாட்டிற்கும், அதனுடன் செல்லும் புகழ்பெற்ற சிங்க சின்னத்திற்கும் (Lion Logo) தகுதி பெற, தேயிலை முழுவதுமாக இலங்கையில் வளர்க்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட வேண்டும்; அது இலங்கை தேயிலை சபையினால் தயார் செய்யப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் கடுமையான தர நியமங்களுக்கு இணங்க வேண்டும். மேலும், இதனை உலகின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் பெறப்படும் தேயிலையுடன் கலக்கவோ அல்லது சேர்க்கவோ முடியாது. இலங்கை தேயிலையின் 95% கலவையை கூட “சிலோன் தேயிலை” (Ceylon Tea) என்று வர்ணிக்க முடியாது.
சிங்க சின்னம் (Lion Logo) கொண்ட தேயிலை இலங்கையில் பொதி செய்யப்பட வேண்டும். வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்கள் பொதிகளில் இச்சின்னத்தை (Lion Logo) பயன்படுத்த முடியாது, இருப்பினும் உள்ளடக்கம் 100% இலங்கையிலிருந்து பெற்றதாக இருந்தால், ‘சிலோன் தேயிலை’ (Ceylon Tea) என்ற பெயர் இன்னும் சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படலாம். உலகெங்கிலும் கிடைக்கும் பல சர்வதேச வர்த்தகப் பெயர்கள் உட்பட, கலப்பு, குறிப்பிடப்படாத தோற்றம் கொண்ட தேயிலையை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான தயாரிப்புகளிலிருந்து உண்மையான சிலோன் தேயிலையை நுகர்வோர் வேறுபடுத்தி இனங்காண்பதற்கு இந்தக் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.
அவ்வாறான உற்பத்திகள் சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் எந்த தேயிலைகளுடனும் கலக்கப்படுகின்றன. கலவை செய்பவரின் திறன், தோற்றம் எவ்வாறு இருப்பினும் ஒரு நிலையான தயாரிப்பை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் நிறுவனம் பாரியளவிலான பொருளாதாரங்களை அனுபவித்து வருவதுடன், இது வழங்குனருக்கு சிக்கலாக இருக்காது. எவ்வாறாயினும், தரத்தின் மட்டம் அரிதாகவே ஒரே தோற்றத்தைக் கொண்ட தேயிலைகளால் பெறுகின்ற சமமானதாக இருக்கும். மேலும் அத்தகைய கலவைகள் ஒருபோதும் சுவைப்பவர்களினால் பாராட்டப்படுகின்ற சதூய்மையான சிலோன் தேயிலையின் பண்புகளை அடையப்பெற முடியாது.
இலங்கையின் சிங்கம்
சிலோன் தேயிலை வர்த்தக குறியுடன் பிரிக்க முடியாத வகையில் தொடர்புபட்டிருப்பது புகழ்பெற்ற சிங்க சின்னம் (Lion of Ceylon logo) ஆகும். இது ஏற்றுமதிக்கு முன்னர் இலங்கையில் பொதி செய்யப்பட்ட தூய சிலோன் தேயிலை (Ceylon Tea) பொதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த சின்னமானது இலங்கையின் தேசியக் கொடியை அலங்கரிக்கும் பழங்கால ஹெரால்டிக் சின்னமான Lion of Ceylon ஐ அடிப்படையாகக் கொண்டது. இது முதன்முதலில் தற்போதைய தேயிலை சபையின் முன்னோடிகளில் ஒன்றான தேயிலை பிரச்சார சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக குறியீடாகும்.



